GuidePedia

0
Share Split என்றால் என்ன?



சென்ற பதிவில் Bonus Share மற்றும் அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இனி Share Split என்றால் என்ன, EPS-ல் அதனுடைய தாக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்போம்.

Bonus Share என்பது ஏற்கனவே நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் லாபத்தை பங்குகளாக முதலீட்டளர்களுக்கு தருவது, இதற்கு பணம் எதுவும் வாங்குவது இல்லை என்பதால் Bonus Share என்கிறோம். ஆனால் Bonus Share என்பது நடைமுறையை வைத்து பார்த்தல் அது இலவசமல்ல என்பதையும், குறுகிய கால முதலீட்டளர்களுக்கு லாபமில்லை என்பதையும் பார்த்தோம். Share Split என்பதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான், ஆனால் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறைந்த முகமதிப்பிற்கு பிரிப்பதைத்தான் Share Split என்கிறோம். உதாரணமாக ஒரு நிறுவன பங்கின் முகமதிப்பு Rs.10/- ஆக இருக்கிறது என்றால், அந்த முகமதிப்பை Re.1/- ஆக குறைத்து ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு இன்னும் 9 பங்குகளை நிறுவனம் கொடுக்கும் இதைத்தான் Share Split என்கிறோம். ஆக முன்பு பத்து ரூபாய் முகமதிப்பில் ஒரு பங்கு வைத்திருந்த ஒரு பங்குதாரர் இப்போது ஒரு ரூபாய் முகமதிப்பில் 10 பங்குகளை வைத்திருப்பார். பங்குதாரரை பொறுத்த வரை, முன்பு ஒரு பங்கு வைத்திருந்தவர் இப்போது பத்து பங்கு வைத்திருப்பார். ஆக, நமக்கு இது லாபம் தானே என்று எண்ணத்தோன்றும் - பணமே கொடுக்காமல் 9 பங்குகள் இலவசமாக கிடைத்தல் அது லாபம் என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் இது லாபமுமில்லை, நஷ்டமுமில்லை. ஏனென்றால் ஏற்கனவே இருப்பதை பிரித்திருக்கிறார்கள் அவ்வளவுதான். சரி நிறுவனம் பிரித்திருக்கிறது, சந்தையில் பங்கின் விலையில் ஏதாவது மாற்றம் வருமா?

சந்தையிலும் பங்கின் விலை Split விகிதத்தின் படி குறைந்து விடும். உதாரணமாக சந்தையில் Rs.150/- விலையில் இருக்கும் ஒரு பங்கு, ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் Split ஆகிறது என்றால், ஒரு பங்கு பத்தாக பிரிகிறதல்லவா? அதைப்போல் ஒரு பங்கின் விலையும் Rs.15/- ஆகிவிடும். 

Texmaco Ltd. என்னும் நிறுவனத்தின் பங்குகள் பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்புக்கு குறைக்கப்பட்டது. 31-12-2008 அன்று Rs.737.10 ஆக இருந்த பங்கு, அடுத்தநாள் அதாவது Split ஆனதும் காலை சந்தையில் Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் ஆக ஆரம்பித்தது. அதாவது Rs.737.10 என்ற விலையில் விற்ற பங்கு, பத்தாக பிரிக்கப்படும் போது, அதன் விலையை பத்தால் வகுத்ததால் Rs.73.71 ஆகிறது. அடுத்த நாள் காலை கொஞ்சம் விலை கூடி Rs.75/- என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. 

சரி இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் ஏன் Share Split செய்யப்படுகிறது? ஒரு பங்கின் விலை அதிகமாக இருந்தால் சிறு முதலீட்டாளர்கள் அந்த பங்கை வர்த்தகம் செய்வது எளிதல்ல என்பதால், Share Split செய்யப்படுகிறது. Bonus Share தருவதற்கும் இது ஒரு காரணம்.

சில நிறுவனங்கள் ஒரே நேரத்தில் Bonus Share மற்றும் Share Split இரண்டையும் கொடுக்கும். உதாரணமாக 2007 October இல் Jai Corporation Ltd. என்னும் நிறுவனம் ஒரு பங்கை பத்து ருபாய் முகமதிப்பில் இருந்து ஒரு ரூபாய் முகமதிப்பிற்கு குறைத்தது. மேலும் 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. ஆக இந்த நிறுவனத்தில் ஒருவர் வாங்கியிருந்த ஒரு பங்கு 20 பங்குகளாக ஆகி இருக்கும் (1 பங்கு Split மூலமாக 10 ஆகும், அப்படி ஆன 10 பங்குக்கும் மேலும் 10 பங்குகள் Bonus ஆக கிடைக்கும்). Bonus மற்றும் Split ஆவதற்கு முந்தைய நாள் Jai Corporation Ltd.-இன் ஒரு பங்கின் விலை Rs.15,310/- ஆக இருந்தது. ஒரு பங்கு 20 பங்கு ஆகிறது என்பதால் விலையும் அதே அளவு குறையும் என்று பார்த்தோம். அதன்படி ஒரு பங்கின் விலை Rs.765.50 ஆக குறைந்திருக்கும். அடுத்த நாள் பங்கின் விலை கொஞ்சம் கூடி Rs.803.70/- ஆக இருந்தது. யோசித்து பாருங்கள், ஒரு சிறு முதலீட்டாளர் Rs.15,310/- கொடுத்து ஒரு பங்கு வாங்க முடியுமா? அப்படி அவரிடம் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரே பங்கில் போட்டு ஒரு வேளை அந்த பங்கின் விலை குறைந்தால் அவருடைய முதலீடு எல்லாம் அடிபட்டுப்போகும் ஒரு பெரிய risk இருகிறதே.. (Don't put all your eggs in single basket என்ற பழமொழியை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் - முதலீட்டின் அடிப்படி இது. குறிப்பாக பங்கு முதலீட்டுக்கு இதை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்) அதனால் Bonus மற்றும் Split ஆவதால் சிறு முதலீட்டாளர்கள் இப்படி பட்ட நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும். அப்படி நிறைய பேர் முதலீடு செய்வதால் பங்கின் விலை கூடும் வாய்ப்பு உண்டு. வாய்ப்பு உண்டு என்றுதான் சொல்கிறேனே தவிர, கண்டிப்பாக கூடும் உடனே அப்படி பங்குகளை வாங்குங்கள் என்று சொல்லவில்லை. ஒரு பங்கை வாங்கவேண்டும் என்று முடிவு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. 

Share Split ஒரு பங்கின் EPS-ஐ எவ்வாறு பாதிக்கறது என்று பார்போம். ஒரு நிறுவனம் 1,000 பங்குகள் வெளியிட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனுடைய நிகர லாபம் Rs.20,000/- என்றால் ஒரு பங்கு சம்பாதித்த பணம் அதாவது EPS Rs.20/-. இதே நிறுவனம் பங்கின் முகமதிப்பை பத்து ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்தால் நிறுவனத்தின் மொத்த பங்குகள் 10,000 ஆகும் (1000 x 10). இப்போது நிகர லாபம் Rs.20,000/- என்பது 10,000 பங்குகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் - EPS Rs.2/- ஆகும். இருபது ரூபாயாக இருந்த EPS, Share Split-க்கு அப்புறம் இரண்டு ரூபாயாக குறைகிறது. ஆக லாப நஷ்ட கணக்கை பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருக்கிறது என்றதும், இந்த ஆண்டு நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா, Share Split ஆகி இருக்கிறதா என்பதை எல்லாம் கவனித்து முடிவு செய்ய வேண்டும். 

இந்த பதிவில் சில நிறுவனங்களை குறிபிட்டிருக்கிறேன். இவை எல்லாம் உதாரணத்திற்காக மட்டுமே சொல்லப்பட்டது. மற்றபடி இந்த பங்குகளை வாங்கவோ விற்கவோ பரிந்துரை செய்யவில்லை.

Post a Comment Blogger

 
Top