GuidePedia

0
பங்குவர்த்தகம் சூதாட்டமா?



பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.

சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்ததில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார்கள், என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இதுப் போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.

சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால் சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்துப் போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.

சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.

விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றிப் பெற முடியும். நம் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.

பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப் படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.

பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.

மார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது ? அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும் வித்யாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன ? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.

அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம். தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

Post a Comment Blogger

 
Top