GuidePedia

0
மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?


முதலீடு என்றவுடன் எடுத்த எடுப்பிலேயே கன்னாபின்னா லாபமெல்லாம் தேவையில்லை! கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும், நான் போடும் ஆரம்ப முதலே..., 'ஆடி காற்றில் அடிச்சுட்டு போச்சு!' என்பது போல மொத்த முதலுக்கும் பங்கம் வராமல் இருந்தால் சரி!'' என்று சொல்லும் நபர்களுக்கான ஒரு முதலீட்டு... சேமிப்பு திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் பலரிடம் பரவலாக்கப்படுவதால், தனியருவர் சந்திக்க நேரும் ரிஸ்க் இதில் குறைகிறது. அவ்வளவு தான்.

அதாவது, நாம் மேலே சொன்னது மாதிரியான நபர்கள் பலர் சேர்ந்து, அவர்களால் முடிந்த தொகையை மொத்தமாக திரட்டி, அந்த தொகையை பங்குசந்தை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்வது. அதே போல, சரியான நேரம் பார்த்து நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் அந்த பங்குகளை விற்றுவிடுவது. இப்படியான தொடர் நடிவடிக்கைகளில் இடையில் கிடைத்த மொத்த லாபத்தையும் சேர்த்து, ஆரம்ப முதலீடு போட்ட அத்தனை நபர்களும் பகிர்ந்து கொள்வது. இது தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில், யார் எவ்வளவு பணம் போட்டார்களே, அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் உறுதியாகிறது. ஒரு வேளை இந்த பணத்தில் வாங்கிய எதாவது ஒரு பங்கில் சிக்கல் ஏற்பட்டு அது விலை குறைய நேர்ந்தால், அதனால் ஏற்படும் மொத்த நஷ்டமும் அந்த திட்டத்தில் முதலீடு செய்த எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் தனியருவர் சந்திக்க வாய்ப்புள்ள பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது.

இந்த மாதிரி திட்டத்தின் சாதக அம்சம் இது மட்டுமல்ல: இன்னும் பலவகையான லாபங்களும் உண்டு. ஒரு சிறு முதலீட்டாளர் தனியாளாக முதலீடு செய்யும் போது, அவர் செய்யும் முதலீட்டுத் தொகை மிகப் பெரிய தொகையாக இருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நல்ல லாபம் தர வாய்ப்புள்ள, நம்பகமான கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கும்போது, அதில் தேவையான அளவு எண்ணிக்கையில் வாங்க முடியாமல் போகலாம். ஆனால், பல சிறு முதலீட்டாளர்களின் பணம் ஒரே இடத்தில் திரட்டப்பட்டு, அது ஒரு பெரும் தொகையாக மாறும் போது, அதைக் கொண்டு விரும்பிய எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியும்.

இன்னொரு பக்கம்_ இப்படி நிறைய பங்குகள் வாங்கி, அதை நிபுணர்கள் கொண்டு நிர்வகிக்கும்போது, அதற்கான நிர்வாகச் செலவுகளையும் பலரும் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் தனி நபருக்கான செலவு குறைகிறது.

இப்படியாக பலர் ஒன்றாக சேர்ந்து முதலீடு செய்து அதிக லாபம் பெறவும், ரிஸ்கைக் குறைத்துக் கொள்ளவும் பரஸ்பரம் உதவிக் கொள்வதால்தான் இந்த திட்டத்தை தமிழில் ''பரஸ்பர நிதி திட்டம்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன், ஒரு தனிநபர் தனது சேமிப்புப் பணத்தை எங்கே லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக செலவழிக்கும் நேரம், உழைப்பு போன்றவை இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மிகக்குறைவுதான். இதுபோக அனுபவம் உள்ள நிபுணர்களின் கண்காணிப்பும், பராமரிப்பும் நமது பணத்துக்கு கிடைக்கிறது என்பது கூடுதல் அனுகூலம். அதோடு இந்த நிபுணர்களுக்கு என நாம் மிகப் பெரும் தொகை எதையும் கூட செலவழிக்க தேவையில்லை.

இப்படி பல அணுகூலங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் உண்டு. அத்துடன் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகைகளும் உண்டு. அதனால், 'பங்குகளில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கே எனக்கு தேவையில்லை' என நினைப்பவர்கள் பங்குகள் சாராத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் வழிகள் உண்டு. அரசுக் கடன் பத்திரங்கள், பிறவகையான கடன் திட்டங்கள் என ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் நிறையவே இருக்கின்றன.

இன்றைக்கு இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி, நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது. இதனால் மற்ற பல வகையான முதலீடுகளை ஒப்பிடும்போது இந்த வகையான முதலீடுகளில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை:

1. நுட்பம் தெரிந்த திறமையாளர்களின் நிர்வாகம்.

2. ஒரே இடத்தில், திசையில் முடங்கிப் போகாமல், பல வழிகளில், துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

3. கண்காணிப்பதும், நிர்வகிப்பதும் எளிது, குறைந்த நேரம் செலவிட்டால் போதும்.

4. அதிக லாபத்துக்கான வாய்ப்பு.

5. குறைந்த நிர்வாகச் செலவு.

6. நினைத்தபோது மீண்டும் காசாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

7 திரட்டிய தொகை எங்கே முதலிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை.

8 விரும்பியபோது ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறிக்கொள்ளும் எளிய வாய்ப்பு.

9. தேர்ந்தெடுக்க ஏராளமான திட்டங்கள்.

10. ஏராளமான வரிச்சலுகைகள்.

11. அதிக நம்பத்தன்மை (செபி போன்ற அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால்).

Post a Comment Blogger

 
Top